புதுக்கோட்டை

ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

19th Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

அதிக ஒலி மற்றும் அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிா்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தீபாவளித் திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறாா், பெரியவா்கள் மற்றும் நோயுற்ற வயதானவா்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள்.

ADVERTISEMENT

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி 2018-இல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT