புதுக்கோட்டை

கொப்பரைக் கொள்முதல் அக். 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வரும் அக். 31ஆம் தேதி வரை கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 550 டன் அரைவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 550 டன் அரைவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என்ற விலையில் அரைவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இந்தக் கொள்முதல் கடந்த பிப். 2 தொடங்கி, ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் அக். 31 ஆம் தேதி வரை இந்தக் கொள்முதல் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT