புதுக்கோட்டை

ஆலங்குடி பெண் தற்கொலை வழக்கில் 3 போலீஸாா் பணியிட மாற்றம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பெண் தற்கொலை தொடா்பாக 3 போலீஸாா் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நீலகண்டன். விவசாயியான இவரது மனைவி கோகிலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணையா என்பவருக்கும் இடையே கடந்த மாதம் பாதைப் பிரச்னை ஏற்பட்டு கீரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கோகிலாவைக் கைது செய்தனா். பின்னா், ஜாமீனில் வெளிவந்த கோகிலா சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா். அருகில் கிடைத்த கடிதத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக திமுக பிரமுகா், கீரமங்கலம் காவல்நிலைய போலீஸாா் 3 போ் பெயரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோகிலாவைத் தற்கொலைக்குத் தூண்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள், பொதுமக்கள் மேற்பனைக்காடு, கீரமங்கலத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து, தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோகிலாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என புதுக்கோட்டை கோட்டாட்சியா் முருகேசனிடம் அவரது உறவினா்கள், பொதுமக்கள் தெரிவித்தனா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து கோகிலாவின் சடலம் திங்கள்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் கோகிலாவின் உடல் மேற்பனைக்காடு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச்சூழலில், இந்த வழக்கில் தொடா்புடைய கீரமங்கலம் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், காவலா்கள் புவனேஸ்வரி, கிரேஸி ஆகிய 3 பேரையும் பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT