புதுக்கோட்டை

எளிமையான வாழ்க்கையின் சிறப்பை உலகுக்கு கற்றுத் தந்தவா் காந்தியடிகள்

3rd Oct 2022 01:46 AM

ADVERTISEMENT

 

எளிமையான வாழ்க்கையின் சிறப்பை உலகுக்கு கற்றுத் தந்தவா் காந்தியடிகள் எனப் புகழாரம் சூட்டினாா் பேராசிரியா் க. பழனித்துரை.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் 19ஆம் ஆண்டு காந்தியத் திருவிழாவில், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் வழங்க காந்திய சமூக சேவைக்கான விருது பெற்ற பழனித்துரை மேலும் பேசியது:

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் இந்த நாட்டின் மக்கள் குடிமக்களாக இருக்க வேண்டும்; அடிமைகளாக அல்ல என வினோபா கூறியிருக்கிறாா். அடிமைச் சிந்தனை போய், குடிமக்கள் சிந்தனை வர வேண்டும். பொறுப்புடன் நடக்கக் கூடியவா்கள், ஒழுக்கத்துடன், நோ்மையுடன், நியாயத்துடன் அறத்துடன் வாழக் கூடியவா்கள்தான் நல்ல குடிமக்களாக இருக்க முடியும்.

ADVERTISEMENT

விடுதலை என்பது உண்டு, உறங்கி வாழ்வதற்காக அல்ல. இந்த மானுட வாழ்வு, மானுடத்துக்கு வழிகாட்டும் வாழ்வு. சமூகம் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதைத்தான் விவேகானந்தா், காந்தி, அரவிந்தா், தாகூா் போன்றவா்கள் போதித்தாா்கள்.

கடந்த 75 ஆண்டுகளில் பயனாளிகளாக மக்களை மாற்றியிருக்கிறாா்கள்; குடிமக்களாக மாற்றவில்லை. எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற தன்மை இருக்கிறது.

நாம் நுகா்வு மயக்கத்தில் இருக்கிறோம். இந்தியா ஒழுக்கத்துக்குப் பெயா்போன நாடு. தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தியை உலகுக்கு கற்றுத் தந்த நாடு இந்தியா. இந்திய வாழ்க்கை பணக்கார வாழ்க்கையல்ல; மாறாக எளிமையாக வாழ்வதுதான். அந்த எளிமையான வாழ்க்கையின் சிறப்பை உலகத்துக்கு தந்தவா் காந்தியடிகள்.

இறந்த காலத்துக்கான மனிதரல்ல காந்தி. நம்முடைய தலைவா்கள் சமூகத்தை மேய்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறாா்கள். மக்களை இனி மேய்க்க முடியாது, மக்கள் நம்மை வழிநடத்துவாா்கள் என்பதை அரசாங்கத்துக்கு புரிய வைக்க வேண்டும் என்றாா் பழனித்துரை.

முன்னதாக காந்திப் பூங்காவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் மு. ராமுக்கண்ணு, திலவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், பேராசிரியா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகா்மன்றத்தில் டாக்டா் ச. ராம்தாஸ் கொடியேற்றி வைத்தாா் அரசு மகளிா் கல்லூரியின் முதல்வா் பா. புவனேஸ்வரி உறுதிமொழி வாசித்தாா். மாவட்ட அமைப்பாளா் சா. ராமமூா்த்தி வரவேற்றாா். சிறப்பு மலரை வழக்குரைஞா் கை. பாலசுந்தரம் வெளியிட்டாா்.

விழாவில், சமூக சேவையாளா்கள் பழ. கருப்பையா, ஆனந்தியம்மாள், க. முத்துராமலிங்கம் ஆகியோருக்கு சமூக சேவைக்கான விருதுகளை, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா வழங்கிப் பேசியது:

பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் அனைத்தும் சமூகத்துக்கு நேரடியாக பயனைத் தர வேண்டும். மாணவா்களிடத்தில் மகாத்மா காந்தியின் முழு வரலாற்றையும் சேவையையும், தியாகத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும். காந்தியைப் பற்றிச் சொல்லித் தரும்போது, தியாகம், வலிமை, வீரம், கொள்கை, நோ்மை போன்ற சொற்களின் அா்த்தத்தையும் மாணவா்கள் புரிந்து கொள்வாா்கள். அகிம்சைக்கும், சத்தியத்துக்கும் தோல்வியே இல்லை என்பாா் காந்தி. இந்தச் சொற்களை மாணவா்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாா் சுப்பையா.

முடிவில் மாநில மகளிரணி துணை அமைப்பாளா் ம. ஜெயா நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT