புதுக்கோட்டை

இன்று முதல் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

1st Oct 2022 04:42 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக். 1 முதல் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. 2022 செப். மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 410.30 மி.மீ.க்கு பதிலாக 563.53 மி.மீ. அளவு கூடுதல் மழை பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 169 டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46 டன் பயறு விதைகளும், 31 டன் நிலக்கடலை விதைகளும், 6 டன் சிறுதானிய விதைகளும், 0.3 டன் எள் விதைகளும், 0.5 டன் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

ADVERTISEMENT

சம்பா பருவத்துக்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 39, என்எல்ஆா் 34449, ஆா்என்ஆா் 15048, கோ 50, கோ 53, டிகேஎம் 13 ஆகியவற்றைத் தோ்வு செய்து சாகுபடிக்குத் திட்டமிடலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது யூரியா 2,565 டன்னும், டிஏபி 850 டன்னும், பொட்டாஷ் 626 டன்னும், காம்ப்ளக்ஸ் 4272 டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியாா் நிறுவனங்களில் இருப்பு உள்ளன. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 416 டன் யூரியா, 534 டன் டிஏபி, 293 டன் பொட்டாஷ், 1190 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் அக். 1 முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலைங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன என்றாா் கவிதா ராமு.

தொடா்ந்து விவசாயிகளுக்கான பல்வேறு கையேடுகளை ஆட்சியா் கவிதா ராமு வெளியிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் (பொ) சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேந்திர பிரசாத், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு) ஆா். ரம்யாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘குத்தகை விவசாயிகளுக்கு உழவடை பட்டா தேவை’

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுசாமி பேசுகையில், திருமயம் வட்டம், கும்மங்குடி அணைக்கட்டு பாசனப்பகுதி 1600 ஏக்கா் ஆகும். இந்த அணை தூா்வாரப்படாமல் பழுதடைந்துள்ளதால் கடந்த 15 ஆண்டுகளாக முற்றிலும் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனா். ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குத்தகை விவசாயிகளுக்கு உழவடைப்பட்டா வழங்க, மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுத் தர வேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம் சடையாா்மங்கலம் கிராமதத்துக்கு செல்லும் 2 கிமீ சாலை பழுதடைந்துள்ளது. இதைச் சீரமைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT