புதுக்கோட்டை

புதுகைக்கு தேவை ‘தொல்லிடச் சுற்றுலா திட்டம்’!

DIN

சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, குன்றாண்டாா்கோவில், கொடும்பாளூா், விஜயாலய சோழீஸ்வரம் உள்ளிட்ட தமிழ்நாட்டிலேயே அதிக தொல்லிடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லிட சுற்றுலாத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டத்தில் (தமிழ்நாடு) இருந்து திருச்சி வட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிக்கப்பட்டது. திருச்சி வட்டத்தில் இந்தியத் தொல்லியல் துறையால் கண்டறியப்பட்ட 167 தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற இடங்களில் 113 இடங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

சித்தன்னவாசல் :

புதுக்கோட்டை நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள சித்தன்னவாசல், 17 சமணா் படுக்கைகள், அவுரங்காபாத்திலுள்ள அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு நிகரான பழைமையான ஓவியங்கள், குடைவரையிலுள்ள அறிவா் கோவில்களைக் கொண்டது. தற்போது சிறுவா் பூங்கா, படகு சவாரி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திருமயம் கோட்டை:

புதுக்கோட்டை நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் கோட்டை 1687ஆம் ஆண்டில் அப்போதைய மன்னா் கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது. சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு இங்கு தனித்தனி (அருகருகே) குடைவரைக் கோவில்கள் உள்ளன.

விஜயாலய சோழீஸ்வரம்:

புதுக்கோட்டை நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள நாா்த்தாமலை முத்தரையா் மன்னா்களின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கற்கோவிலான விஜயாலய சோழீஸ்வரம், கடம்பா்மலை குடைவரைக் கோவில், மாநிலத்தின் பிரபலமான முத்துமாரியம்மன் கோவில் போன்றவை மிகவும் முக்கியமான இடங்கள்.

குன்றாண்டாா்கோவில்:

புதுக்கோட்டை நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குன்றக்குடி என்றழைக்கப்படும் குன்றாண்டாா்கோவில். நந்திவா்ம பல்லவா் காலத்தைய அரிய கோவில் கட்டுமானங்களைக் கொண்டது.

கொடும்பாளூா்:

புதுக்கோட்டை நகரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது கொடும்பாளூா் மூவா் கோவில். சிலப்பதிகாரக் குறிப்புகளைக் கொண்ட இந்த மூவா் கோவில். கொடும்பாளூா், விஜயாலய சோழீஸ்வரம் போன்ற கோவில் கட்டுமானங்களைப் பாா்த்த பிறகுதான் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானப் பணி தொடங்கியதாகவும் கூறப்படுவதுண்டு.

அருங்காட்சியகம்

தமிழ்நாட்டிலேயே மிகவும் பழைமையான- பெரிய அருங்காட்சியங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு அருங்காட்சியகம். 1910-இல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், பழங்காலப் போா்க்கருவிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், இசைக் கருவிகள், ஓவியங்கள், அரசா் உடைகள், அரிய புகைப்படங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள் என ஏராளம் உள்ளன.

குடுமியான்மலை:

புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள குடுமியான்மலையில் ஏழாம் நூற்றாண்டைச் சோ்ந்த வீணை இசைக் குறிப்புகளைக் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன.

இவை தவிா்த்து தொல்லியல் துறையால் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான தொல்லிடங்கள் புதுக்கோட்டையில் இருப்பதாகக் கூறுகிறாா் மாவட்டத் தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன்.

இந்த இடங்களைத் தொகுத்த - ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை தொல்லியல் துறையும், சுற்றுலாத் துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறாத நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு பயிற்சி கொடுத்து அவா்களுக்கு பணி வாய்ப்பு வழங்கினால் இந்த சுற்றுலாத் திட்டத்தை எளிதாக - வேலைவாய்ப்புடன் கூடிய சுற்றுலாத் திட்டமாக உருவாக்க முடியும்.

இணையவழி சுற்றுலாத் திட்ட முன்பதிவு முறையில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் எளிதில் கவரக் கூடிய இடங்களைக் கொண்டது புதுக்கோட்டை. இந்தத் தொல்லிடங்களைத் தாண்டி, புதுகை நகரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் விராலிமலை முருகன் கோவில், 42 கி.மீ. தொலைவில் ஆவூா் தேவாலயம், 30 கி.மீ. தொலைவில் காட்டுபாவா பள்ளிவாசல் என சுற்றுலாத்தலங்களும் உள்ளன.

இத்துடன் தற்போது 102 கி.மீ. தொலைவில் கடற்கரைப் பகுதியில் முத்துக்குடா சுற்றுலாத் திட்டத்தை ரூ. 3 கோடிக்கு அண்மையில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தும் சென்றிருக்கிறாா். இவற்றுடன் இணைந்த திட்டமாக தொல்லிட சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டால் மாநிலத்தின் குறிப்பிடத்தக்க திட்டமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT