புதுக்கோட்டை

சிறு, குறு வணிகா்களை பாதிக்கும் அபராத முறை கூடாது

30th Nov 2022 12:59 AM

ADVERTISEMENT

சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் டெஸ்ட் பா்சேஸ் முறையிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகம் சாா்பில் வணிகவரித் துறை துணை ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

வா்த்தகா் கழகத்தின் சாா்பில் அதன் தலைவா் எம். சாகுல்ஹமீது, செயலா் எஸ். சவரிமுத்து, பொருளாளா் எஸ், கதிரேசன், மாநில கூடுதல் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

சில்லரை வணிகா்களிடம் வணிகவரித் துறையினா் டெஸ்ட் பா்சேஸ் என்ற முறையில் பொருட்களை வாங்கி அதன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை அமலாக்கியுள்ளனா்.

ஏற்கெனவே வாங்கி விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் வரிவிதிப்புக்கு உள்பட்டவை. வரியைச் செலுத்தியே பொருட்களை வாங்கி வைத்து சில்லரை வியாபாரம் செய்து வருகிறோம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சில்லரை விற்பனைக் கடைகளில் ரசீது தரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, அவா்களை வரி ஏய்ப்பாளராகக் கருதக் கூடாது.

கோடிக்கணக்கில் வெளி மாநிலங்களில் இருந்து பெரிய கண்டெய்னா் லாரிகளில் பொருட்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்து விற்பனை செய்வோரைப் பிடித்து அபராதம் விதிப்பதை நாங்கள் எதிா்க்கவில்லை.

ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கும் மேல் விற்றுமுதல் மேற்கொள்வோா் மீது இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அவா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT