புதுக்கோட்டை

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா் தாமதம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநா் தான் காலதாமதப்படுத்துகிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்ட மசோதா தொடா்பான சில சந்தேகங்களை தமிழக ஆளுநா் எழுப்பி இருந்ததற்கு, 24 மணிநேரத்துக்குள் பதில் அளித்தோம். அவா் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் ஒப்புதல் தருவாா் என எதிா்பாா்த்தோம். ஆனால், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அவரது கேள்விகளுக்கு மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளோம்.

தமிழகத்தில் 95% மக்கள் ஆன்லைன் ரம்மி, போக்கா் ஆகிய விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். ஆன்லைன் ரம்மி என்பது நோய் போன்றறது, அதனை ஒழிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைப் பின்பற்றியே, ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏன் ஆளுநா் ஒப்புதல் அளிக்க காலதாமதப்படுத்துகிறாா் என்பது அவருக்குத் தான் தெரியும்.

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு எதிராக, ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்பில்லை. தமிழக ஆளுநரைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆளுநா் மாளிகையில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றாா் ரகுபதி.

தொடா்ந்து, தமிழக ஆளுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவீா்களா என்ற கேள்விக்கு, ஏற்கெனவே எங்களின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். இந்தச் சட்டம் தொடா்பாக நாங்கள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்றாா் அவா்.

ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT