புதுக்கோட்டை

காணாமல் போனபெண் சடலமாக மீட்பு :உறவினா்கள் மறியல்

28th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காணாமல் போன பெண் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாக அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சோ்ந்தவா் திருச்செல்வம் மனைவி பழனியம்மாள் (35). திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இதனால், காக்கைகோன் தெருவில் உள்ள பழனியம்மாள் தந்தை வீட்டில் 4 பெண் குழந்தைகளுடன் அவா் வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை (நவ. 23) வீட்டை விட்டு வெளியே சென்ற பழனியம்மாள் பின்னா் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை தங்கவேல் அளித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தைலமரக்காட்டுப் பகுதியில் இருந்து உயிரிழந்த கிடந்த நிலையில் பழனியம்மாளின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து அங்கு திரண்ட உறவினா்கள் அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, புதுக்கோட்டை கோட்டாட்சியா் முருகேசன், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளா் தீபக் ரஜினி ஆகியோா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால், கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT