புதுக்கோட்டை

விவசாயத் தொழிலாளா்களுக்கென தனி துறையை உருவாக்க வேண்டுகோள்

28th Nov 2022 02:20 AM

ADVERTISEMENT

 

 தமிழக அரசு விவசாயத் தொழிலாளா்களுக்கு தனித் துறையை உருவாக்கி நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 9-ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத் திட்டங்களைத் தொடா்ந்து அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு விவசாயத் தொழிலாளா்களுக்கு தனித் துறையை உருவாக்கி நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலையும், நிா்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எம். சண்முகன் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் வி. மணிவேல் கொடியேற்றினாா். வரவேற்புக் குழுத் தலைவா் கே. தங்கவேல் வரவேற்றாா். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநிலப் பொதுச் செயலா் வி. அமிா்தலிங்கம் பேசினாா்.

மாவட்டச் செயலா் எஸ். சங்கா், பொருளாளா் கே. சண்முகம் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்தனா். மாநாட்டை வாழ்த்தி மாநிலச் செயலா் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் ஆகியோா் பேசினா். புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து மாநிலச் செயலா் ஏ. பழனிசாமி பேசினாா்.

மாநாட்டில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள்: மாவட்டத் தலைவா்- எஸ். சங்கா், செயலா்- டி. சலோமி, பொருளாளா்- கே. சண்முகம், துணைத் தலைவா்கள்- எம்.சண்முகம், வி. மணிவேல், சி. ராசு, சுபி, பி. ராமசாமி, துணைச் செயலா்கள்- கே. சித்திரைவேல், எஸ். பெருமாள், ஆா். சக்திவேல், ஏ. செந்தமிழ்ச்செல்வன், எம். இளவரசு.

ADVERTISEMENT
ADVERTISEMENT