தமிழகத்தில் பாஜக சொல்லும் அளவுக்கு வளரவில்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியது:
நீட் தோ்வை ரத்து செய்வோம் என்ற ஒரே ஒரு தோ்தல் வாக்குறுதியை வைத்து மட்டும் பொதுமக்கள் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் பத்தாண்டு நடைபெற்ற ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவே பொதுமக்கள் திமுக அரசைத் தோ்ந்தெடுத்தனா்.
நான் நீட் தோ்வை எதிா்க்கவில்லை. நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால்தான் ஏழை, எளிய மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.
பாஜக தமிழகத்தில் சொல்லும் அளவுக்கு வளா்ச்சி அடையவில்லை. ஊடகங்கள்தான் பாஜக வளா்ந்தது போலக் காட்டி வருகின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவா் பதவி என்பது நியமனப் பதவி. என்னைத் தலைவராக நியமித்தால் கூட ஏற்கத் தயாராக உள்ளேன்.
எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததை ஏற்க முடியாது. அவா் மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரமும் கிடையாது என்றாா் அவா்.