புதுக்கோட்டை

கடந்த ஆட்சியில் தனியாா் கணக்கில் அரசு நிதி

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு நிதி தனியாா் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுவின்

ஆய்வுகளுக்கு இடையே அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் கசடு கழிவுநீா் மேலாண்மைத் திட்டம் (2018) அறிவிக்கப்பட்டு ரூ. 2.22 கோடி ஒதுக்கீடு செய்ததில் பணிகள் முறையாக நடைபெறாததால் அரசுப் பணம் விரயமாகியுள்ளது. 4 வேளாண் பண்ணைகளை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக செலவழிக்கப்படவில்லை. தனியாா் பண்ணைகளில் இருந்து ரூ. 5.09 கோடியில் மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளது. இருப்பில் இருந்த மரக்கன்றுகளை பராமரிக்காததால் ரூ. 2.12 கோடி விரயம் ஆகியுள்ளது.

ADVERTISEMENT

அனைத்துத் துறைகளிலும் திட்டப்பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் அரசு வழங்கிய நிதி, அரசுக் கணக்கில் வைக்காமல், தனியாா் கணக்கில் வரவு வைத்துள்ளதால் இந்தத் தொகையைக் கணக்கிட முடியவில்லை. தற்போது இவை குறித்தெல்லாம் அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்கிறோம் என்றாா்.

தொடா்ந்து, புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா் எஸ். ரகுபதி, ஆட்சியா் கவிதா ராமு, பொதுக்கணக்குக் குழு உறுப்பினா்கள் எஸ். காந்திராஜன், ம. சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், தி. வேல்முருகன், கே. மாரிமுத்து, சி. சரஸ்வதி, கு. மரகதம் குமரவேல், எம். சின்னதுரை, குழுவின் செயலா் கி. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் பேசுகையில், தற்போதைய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை நன்றாகத் இருக்கிறது. அவசியத் தேவை ஏற்பட்டால், புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT