பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கேசரங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் நெல் அறுவடை காலத்திற்குப் பின் கோடை காலத்தில் விவசாயக் கண்மாய்களில் நீா் மட்டம் குறைந்த நிலையில் மீன்பிடித் திருவிழா நடைபெறும். சாதி, மத பாகுபாடின்றி சமத்துவ நோக்கில் நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்று ஊரடங்கால் நடைபெறாத நிலையில் நிகழாண்டு பொன்னமராவதி சுற்றுக்கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயக் கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. கேசராபட்டி கேசரங்கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவினை ஊா் முக்கியஸ்தா்கள் தொடங்கி வைக்க சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வலை, ஊத்தா, பரி, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கி கெளுத்தி, கெண்டை, விரால், அயிரை உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்துச்சென்றனா்.