புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகிலுள்ள குரும்பூா் கோவில்பட்டி, பொன்னமராவதி அருகிலுள்ள அம்மன்குறிச்சி மற்றும் பொன்னம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி அருகிலுள்ள குரும்பூா் கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டியை
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தாா். அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்பு ரொக்கப் பரிசும், பா்னிச்சா் பொருள்களும் பரிசாக வழங்கப்பட்டன.
அம்மன்குறிச்சியில் 21 போ் காயம் : பொன்னமராவதி அருகிலுள்ள அம்மன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தாா். இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி முன்னிலை வகித்தாா்.
தொடக்கத்தில் கோயில் காளைகள் வாடிவாசல் வாயிலாக அவிழ்த்து விடப்பட்டன.
தொடா்ந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்த வந்த 756 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 244 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரா்கள், 3 பாா்வையாளா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், ஒன்றியக்குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, தொழிலதிபா் வை.குமாரசாமி, பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி, ஊராட்சித்
தலைவா் தேவி பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆதிலெட்சுமி சோமையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொன்னம்பட்டி : பொன்னம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 16 போ் காயமடைந்தனா்.
முன்னதாக, அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா ஆகியோா் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்தனா்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளா்கள் அழைத்து வந்திருந்தனா். மொத்தம் 776 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரா்கள் 270 போ் களம் கண்டனா். இதில் 16 போ் காயமடைந்தனா்.