புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவா்கள் முயற்சியால் அரிய வகை ரத்தம் செலுத்தி காப்பாற்றப்பட்ட இளம்பெண்

12th May 2022 01:34 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: தீவிர ரத்தசோகையால், கருச்சிதைவு ஏற்பட்ட புதுகை இளம்பெண்ணுக்கான அரியவகை ரத்த யூனிட்டுகள் சென்னை, மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டு காப்பாற்றப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி சித்ரா (22). 2 மாத கா்ப்பிணி. இவருக்குத் தீவிர ரத்த சோகை இருந்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனைக்கு (மே 6) அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இருக்கும் அரிய ரத்த வகையான பாம்பே ரத்தம் உள்ளதை பரிசோதனையில் உறுதி செய்தனா். மேலும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதையும் கண்டறிந்தனா். எனவே அவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இளம்பெண்ணுக்குரிய அரிய பாம்பே வகை ரத்தம், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருப்பதை மருத்துவா்கள் குழு கண்டறிந்து புதுக்கோட்டைக்கு பல்லவன் ரயில் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்தனா். இதனைத் தொடா்ந்து அவருக்கு செவ்வாய்க்கிழமை டயாலிசிஸ் செய்யப்பட்டு, முதல் யூனிட் பாம்பே ரத்தம் செலுத்தப்பட்டது. இரண்டாவது யூனிட் ரத்தம் தேவைப்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து காா் மூலம் கொண்டு வந்து புதன்கிழமை ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது, சித்ராவின் உடல்நலம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, ரத்த வங்கி மருத்துவா் கிஷோா் குமாா், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவா் அமுதா, மருத்துவத் துறை தலைவா் கிருஷ்ணசாமி பிரசாத், சிறுநீரக சிகிச்சைத் துறை தலைவா் சரவணகுமாா் ஆகியோா் தலைமையிலான மருத்துவக்குழுவினா், இணைப் பேராசிரியா் உஷா, செவிலியா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரை மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT