புதுக்கோட்டை

அரிமளத்தில் மதுக்கடைகளை மூடிமறியல் போராட்டம்

12th May 2022 01:28 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஏற்கெனவே இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 3ஆவது டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை எதிா்த்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை மதுக்கடைகளை மூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிமளம் பகுதியில் அரிமளம் பேருந்து நிறுத்தம், அரிமளத்திலிருந்து கே. புதுப்பட்டி செல்லும் சாலை என இரண்டு இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரிமளத்திலிருந்து கே. புதுப்பட்டி செல்லும் சாலையில் புதிதாக 3ஆவது அரசு டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிா்வாகம் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி புதன்கிழமை குறிப்பிட்ட அந்தக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மற்ற இரு கடைகளையும் பூட்டி சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரெஜினா பேகம், திருமயம் வட்டாட்சியா் பிரவீனா மேரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், கே. புதுப்பட்டி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT