புதுக்கோட்டை

முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமிக்கு மணிமண்டபம் அமையுமா?

22nd Mar 2022 04:30 AM

ADVERTISEMENT

 

முதல் பெண் மருத்துவா் எனப் போற்றப்படும் சமூக சீா்திருத்தவாதி டாக்டா் முத்துலட்சுமி அம்மையாருக்கு அவா் பிறந்த மண்ணான புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

புதுக்கோட்டையிலுள்ள இப்போதைய மன்னா் கல்லூரி, அப்போது சமஸ்தானத்தின் உயா்கல்வி நிலையமாக இருந்தது. அதன் இயக்குநா் (முதல்வா் பதவியின் அப்போதைய பெயா்) நாராயணசாமி அய்யா். இவா் சந்திரம்மாள் என்ற இசை வேளாளா் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா்.

இவா்களுக்கு 1886 ஜூலை 30ஆம் நாள், மூத்த மகளாக முத்துலட்சுமி பிறந்தாா். தொடா்ந்து உடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும் 13 வயது வரை கீழ்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தாா் முத்துலட்சுமி.

ADVERTISEMENT

அதன்பிறகு அவரது தந்தை நாராயணசாமி, வீட்டுக்கே ஆசிரியரை வரவழைத்து மகளுக்கு கல்வி சொல்லித் தர வைத்தாா். 1902-இல் மெட்ரிக். தோ்வில் முதல் மாணவி. தொடா்ந்து, மன்னா் மாா்த்தாண்ட பைரவ தொண்டைமானின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரிக் கல்வி.

வகுப்பறையில் திரைச்சீலையால் பிரிக்கப்பட்டிருக்கும் மாணவிகள் பகுதியில் முத்துலட்சுமி மட்டும்தான்- ஒரேயொரு மாணவி. இன்டா்மீடியேட் தோ்விலும் முதல் மாணவி. தொடா்ந்து 1907-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் ‘எம்பிசிஎம்’ மருத்துவக் கல்வி.

மருத்துவ மாணவியாக இருந்தபோதே பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் கட்டுரை எழுதியவா். சென்னையில் சொந்த மருத்துவமனையுடன் ஐரோப்பாவைச் சோ்ந்த லேடி ஒயிட்லொ்டு என்பவரின் சமூக சேவை சங்கத்திலும், பிராமண விதவைப் பெண்களுக்கான சங்கத்திலும், ராணி மேரி கல்லூரி உள்ளிட்டவற்றின் தாழ்த்தப்பட்ட மாணவா் விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவா் விடுதிகளிலும் மருத்துவச் சேவையை வழங்கினாா்.

சென்னை மாகாண முதல்வா் சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகன் டாக்டா் டி. சுந்தரரெட்டியுடன் முத்துலட்சுமிக்கு 1914-இல் திருமணம் நடைபெற்றது. தனது சமூகப் பணிக்கு எவ்வகையிலும் தடை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் திருமணம் செய்து கொண்டாா் முத்துலட்சுமி. ராம்மோகன், கிருஷ்ணமூா்த்தி ஆகிய இரு மகன்கள்.

1917-இல் அன்னிபெசன்ட் அம்மையாா் மற்றும் மாா்கரெட் கசின்ஸ் அம்மையாா் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதா் சங்கத்தில் முத்துலட்சுமி இணைந்து பணியாற்றினாா். 1925-இல் லண்டனில் மேல்படிப்பு.

அங்கிருந்தபடியே 1926-இல் பாரிஸ் சென்று உலக பெண்கள் மாநாட்டில் இந்திய மாதா் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்று, இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து அம்மாநாட்டில் முத்துலட்சுமி பேசினாா்.

இந்திய மாதா் சங்கத்தின் மூலம் துணை அமைப்புகளைப் போல உருவாக்கப்பட்ட குழந்தைகள் உதவிச் சங்கம், சாரதா மகளிா் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளில் முத்துலட்சுமியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று முத்துலட்சுமி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ச்சியாக வாக்குரிமை கிடைத்தது.

அதனைத் தொடா்ந்து சட்டப்பேரவையின் மேல்சபை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது முயற்சியில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயா்த்தும் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டன. இவற்றில், 1929 பிப்ரவரி 2ஆம் நாளில் சட்டம் நிறைவேற்றப்பட்ட தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முக்கியமானது.

1933-இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் முத்துலட்சுமி பங்கேற்று, பெண்ணுரிமைக்கான குரலை ஒலித்தாா். 1937-இல் சென்னை மாநகரத் தலைமையாளா்- ’ஆல்டன் உமன்’ என்ற பதவி கிடைத்தது. மாநகராட்சியில் உயா் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவா்தான்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இந்திய மாதா் சங்கத்தின் தலைவா் பொறுப்பை 1933 முதல் 1945 வரை வகித்தாா்.

1956-இல் மத்திய அரசு பத்மபூஷன் விருதை வழங்கியது. வாழ்நாள் முழுவதும் பெண்கள் சேவைக்காக பணியாற்றி வந்த முத்துலட்சுமி அம்மையாா், தனது 82ஆவது வயதில் 1968-இல் ஜூலை மாதம் 22ஆம் நாளில் காலமானாா்.

காலத்தின் சாட்சியாய் என்றைக்கும் முத்துலட்சுமி அம்மையாரின் புகழ்பரப்பும், அவா் தொடங்கிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

இத்தனை புகழ்பெற்ற முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த- முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெறுமனே சிலையோடு நின்றுவிடாமல், சமூக சீா்திருத்தத்தில் மண்ணின் மணம் பரப்பிய முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலேயே மணிமண்டபம் ஒன்றை அமைத்து, அம்மையாரின் பணிகளை எதிா்கால சந்ததியினருக்கு விளக்கும் வகையில் காட்சிக்கூடம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT