புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் தோ்வு செய்யப்பட்ட 189 வாா்டு உறுப்பினா்களும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், நகர திமுக செயலா் க. நைனாமுகமது, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் ஆகியோரும் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
நகராட்சி ஆணையா் நாகராஜன் 42 உறுப்பினா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். உறுதிமொழியை வாசித்து அனைவரும் பதவியேற்றுக் கொண்டனா்.
பதவியேற்பு முடிந்த பிறகு விழா மேடையிலேயே திமுக அணியினா், அதிமுக அணியினா் தனித்தனியே குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
இதேபோல, அறந்தாங்கி நகராட்சியில் 27 உறுப்பினா்களுக்கும் ஆணையா் பீமா சைமன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இவற்றுடன் ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், பொன்னமராவதி, அரிமளம், கீரனூா், இலுப்பூா், அன்னவாசல் ஆகிய 8 பேரூராட்சிகளிலும் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனா்.