புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பழைய ஆவணங்களை எண்மமயமாக்குதல் (டிஜிட்டல்) குறித்து செய்தித்துறை இயக்குநரும், தமிழ் இணையக் கல்வி கழக இயக்குநருமான வீ.ப. ஜெயசீலன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக ஆவணக் காப்பகத்தில் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரகத்தில் இதுகுறித்த அலுவலக நடைமுறைகள் தொடா்பாக ஆட்சியா் கவிதா ராமுவுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1801 முதல் 1946ஆம் ஆண்டு வரையிலான தா்பாா் ஆவணங்களும், பழைய திவான் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய ஆவணங்களும் புதுக்கோட்டை மாவட்டம் தொடா்பான அரசிதழ்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் அனைத்தும் புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடா்ந்து முதல்வா் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாருக்குச் சிலை அமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், அதற்கான இடம் மற்றும் பணி முன்னேற்பாடுகள் குறித்தும் ஜெயசீலன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, இணை இயக்குநா் (தகவல் தொழில்நுட்பத் துறை) கோமகன், உதவி இயக்குநா் (தகவல் தொழில்நுட்பத் துறை) காமாட்சி, வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) கருணாகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரெ.மதியழகன், பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.