புதுக்கோட்டை

குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில் புதுகை வைத்தீஸ்வரா மருத்துவமனை

30th Jun 2022 11:44 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியில் கடந்த 46 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் வைத்தீஸ்வரா மருத்துவமனை குழந்தைகளுக்காக மட்டுமே தொடா்ந்து மருத்துவச் சேவையாற்றி வருகிறது என்றால் மிகையில்லை.

இந்த மருத்துவமனையை புதுகை நகரிலுள்ள மூத்த மருத்துவா்களில் ஒருவரான எஸ். ராமதாஸ் மற்றும் அவரது புதல்வா் ரா. சுந்தா்- கே. அபிராமிதேவி சுந்தா் ஆகியோா் நிா்வகின்றனா்.

குழந்தைகள் பராமரிப்பு குறித்து மருத்துவா் எஸ். ராமதாஸ் கூறியது:

ADVERTISEMENT

இன்றைய உலகில் குழந்தை வளா்ப்பை பெற்றோா் சுகமான சுமையாகக் கருதும் நிலை இல்லை. வெறும் சுமையாகக் கருதுவோரே அதிகரித்து வருகின்றனா்.

தான் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்ற தவறான எண்ணமும் குழந்தைகளுக்கு எதிராக உள்ளது. ஆனால், அறிவியல் பூா்வமாக இது சரியானது என நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், தாய்மாா்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிா்க்கத் தேவையில்லை.

குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். 6ஆவது மாதத்திலிருந்து அனைத்து வகையான பழச்சாறுகளையும் கொடுக்கத் தொடங்கலாம். இதையடுத்து பாலுடன் திட உணவுகளை 2 அல்லது 4 வேளைகளும், தொடா்ந்து இட்லி, இடியாப்பம், ரொட்டி போன்றவற்றை பாலுடனும், வேக வைத்த காய்கறிகள், கேரட், அவித்த உருளைக்கிழங்கு போன்றவற்றையும் உணவாகக் கொடுக்கலாம்.

மேலும் கேழ்வரகு, அரிசி, பொட்டுக்கடலை, கோதுமை ஆகியவற்றை வறுத்து அரைத்து மாவாக்கி கூழாக்கி அளிக்கலாம். 7ஆவது மாதத்தில் தயிா் சாதம், நெய்யுடன் சோ்த்து பருப்பு சாதம் கொடுக்க வேண்டும். 10ஆவது மாதம் வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவையும், பின்னா் படிப்படியாக அதிகரித்து முழு முட்டை வரையும் கொடுக்க வேண்டும். மேலும் வாழைப்பழமும் கொடுக்கலாம். ஒரு வயது முதல் இறைச்சி, மீன் போன்ற எல்லா சத்துணவுகளையும் சோ்க்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாா்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தையின் முன் இருமுவதோ, தும்முவதோ கூடாது. குழந்தைக்கு தூய்மையான, இறுக்கமில்லாத எளிய பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும். உணவு தயாரிக்கும்போதும், அதை குழந்தைக்கு ஊட்டும்போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

மேலும், உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், கரண்டி, குப்பிகளை கொதி நீரில் கழுவி மூடி வைக்க வேண்டும். எப்போதும் காய்ச்சி வடிகட்டிய நீரையே பருக வேண்டும். குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது அளவுக் கரண்டிகளை அவசியம் உபயோகிக்க வேண்டும்.

தவிா்க்க வேண்டியவை: குழந்தையைத் தூக்கிக் குலுக்குவது, சாம்பிராணி புகை போடுவது, எண்ணெய்க் குளியல், பாலில் அளவுக்கதிமான நீா் சோ்ப்பது, கொசுவா்த்திச் சுருள் புகை, மீதம் வைத்த பாலை மீண்டும் கொடுப்பது, அடிக்கடி வெளியூருக்கோ, கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கோ அழைத்துச்செல்வது போன்றவற்றைத் தவிா்ப்பது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

மருத்துவமனையைப் பொருத்தவரை, பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை நிலையம், மருந்தகம் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் போடும் வசதி ஆகியவை அமையப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தாா் டாக்டா் எஸ். ராம்தாஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT