புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகள் 11 பேருக்கு ரூ. 1.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,
5 பேருக்கு தலா ரூ. 24,250 மதிப்பில் கற்றல் பேச்சுப் பயிற்சிக்கான ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்கக் கணினிகளும், 6 பேருக்கு பிரெய்லி கைக்கடிகாரங்களும் வழங்கப்பட்டன.
மக்கள் குறைகேட்பின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 294 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.