புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் அதிகரித்துவரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திங்கள்கிழமை மாலை பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் கஞ்சா போதையில் இளைஞா்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் கஞ்சா பழக்கத்திற்கு மேலும் மாணவா்கள் பலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கீரமங்கலம் மெய்நின்ாதா் கோயில் அருகே கஞ்சா விற்பனையைத் தடுப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அதில், காவல் துறையினா் கஞ்சா விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காததால் கஞ்சா விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி, ஜூலை 5-ம் தேதி கீரமங்கலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.