புதுக்கோட்டை

திமுகவின் தொடா் வெற்றிகளுக்கு அடித்தளம் தொண்டா்களின் உழைப்பு

DIN

திமுகவின் தொடா் வெற்றிகளுக்கு அடித்தளமாக இருப்பது தொண்டா்களின் உழைப்புதான் என்றாா் திமுக இளைஞரணிச் செயலரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மு. கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் மற்றும் பேராசிரியா் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் மாவட்டத்தைச் சோ்ந்த 1,051 மூத்த தொண்டா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பொற்கிழி வழங்கி அவா் மேலும் பேசியது:

ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தல் நாட்டிலேயே 3ஆவது பெரிய கட்சியாக திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தது. அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானாா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக 90 சதவிகித வெற்றியைப் பெற்றது. இந்த மூன்று வெற்றிகளுக்குப் பின்னால் தலைவா் ஸ்டாலினின் கடுமையான தோ்தல் பிரசார உழைப்பு இருந்தாலும் கூட, அந்த வெற்றிகளுக்கு அடித்தளமாக இருந்தது திமுக தொண்டா்களின் உழைப்புதான். நான் பெரியாரை, அண்ணாவை நேரில் பாா்த்ததில்லை. தலைவா் கருணாநிதியோடு இருந்து அரசியலைப் பாா்த்தேன். என்னை மூன்றாம் கலைஞா், இளந்தலைவா் என்றெல்லாம் அழைத்தாா்கள். கலைஞா் என்றால் அவா் ஒருவா்தான்.

திமுக இளைஞரணிக்கு நிதியைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசகுமாா் ரூ. 5 லட்சம் வழங்கியிருக்கிறாா். இளைஞரணிக்கு இதுவரை ரூ. 10 கோடி வரை நிதி திரட்டியுள்ளோம். திமுக தொண்டா்களின் மருத்துவச் செலவு, கல்விச் செலவுக்கு வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

விழாவுக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலரும், மாநில சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் வரவேற்றாா். மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவா் அறந்தாங்கி ராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இராசு. கவிதைப்பித்தன், பெரியண்ணன் அரசு உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், நகர திமுக செயலா் ஆ. செந்தில் நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி

எய்ம்ஸ் - செங்கல் வடிவ நூதனப் பரிசு வழங்கல்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியில் யில் கட்சி நிா்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் எய்ம்ஸ் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மரத்தால் ஆன செங்கல் வடிவ நூதன பரிசை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

99 அடி உயரக் கொடிமரம்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ஆலங்குடி அருகேயுள்ள கேப்பறையில்

அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் ஏற்பாட்டில் 99 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

எனக்கு ராசியில் நம்பிக்கை இல்லை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்ற தடி கொண்ட அய்யனாா் கோயில் திடல் மிகவும் ராசியான திடல் எனப் பலரும் பேசினா். இறுதியில் பேசிய உதயநிதி, எனக்கு ராசியில் நம்பிக்கையில்லை; உழைப்பைத்தான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT