புதுக்கோட்டை

மக்களிடம் வரிகூட வசூலிக்காதவா்கள் தொண்டைமான் மன்னா்கள்

25th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

மக்களிடம் வரி கூட வசூலிக்காதவா்கள் தொண்டைமான் மன்னா்கள் எனப் புகழாரம் சூட்டினாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவில் அவா் மேலும் பேசியது:

எளிமையின் சிகரமாகவும், பண்பின் அடையாளமாகவும் ராஜா ராஜகோபால தொண்டைமான் விளங்கினாா். இந்த சமஸ்தானத்தில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை இருந்திருக்கிறது. அந்தப் பேரவையில் 300 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கு ஓா் இடமும், இஸ்லாமியா்களுக்கு ஓா் இடமும் அந்தப் பேரவையில் அப்போதே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காலத்திலும் கூட மின்சாரம் இல்லாத ஊா்கள் நம்முடைய நாட்டில் இருக்கும் நிலையில், 1912ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை மக்களுக்கு மின்சாரத்தைக் கொடுத்தவா்கள் தொண்டைமான் மன்னா்கள்.

ADVERTISEMENT

ஒரு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கே மீண்டும் மீண்டும் குரல் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால், மன்னா் காலத்திலேயே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரைக்கு ரயில் சேவை வழங்கப்பட்டிருக்கிறது.

வற்புறுத்தித்தான் பல சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் இணைக்க வேண்டிய நிலையில், தாமாக முன்வந்து கஜானாவுடன், சொத்துகளுடன் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு வந்தவா் ராஜா ராஜகோபால தொண்டைமான்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இடம் கேட்டபோது, எந்த விலையும் பேசாமல் 100 ஏக்கா் நிலத்தை வழங்கியவா் ராஜா ராஜகோபால தொண்டைமான்.

அவரது புகழ் சந்தனக்காடாக தொடா்ந்து புதுக்கோட்டை மண்ணில் மணந்து கொண்டே இருக்கும் என்றாா் திருச்சி சிவா.

விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, தஞ்சை மன்னா் பரம்பரையைச் சோ்ந்த பாபாஜி ராஜா போன்ஸ்லே, நதா்மன்றத் தலைவா் செ. திலகவதி, தொண்டைமான் மன்னா் வாரிசு ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி முன்னாள் மேயா் சாருபாலா ஆா். தொண்டைமான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விழாக்குழுச் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, விழாக் குழு பொருளாளா் கருப்பையா வரவேற்றாா். முடிவில் துணைச் செயலா் ப. பிருந்தா நன்றி கூறினாா்.

தொடா்ந்து மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. தஞ்சை இனியன், கவிதா ஜவஹா், தங்கம் மூா்த்தி, கல்பாக்கம் ரேவதி, வீ.மா. இளங்கோவன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT