புதுக்கோட்டை

விளிம்பு நிலை மக்களுக்காக உழைப்பது வாக்கு வங்கி அரசியல் அல்ல: முதல்வா் மு.க. ஸ்டாலின்

9th Jun 2022 02:34 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: விளிம்பு நிலை மக்களுக்காக உழைப்பதை வாக்கு வங்கி அரசியல் என கொச்சைப்படுத்த முடியாது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 81.31 கோடி மதிப்பில் 140 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ. 143.05 கோடி மதிப்பில் 1,397 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 379.30 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவா் மேலும் பேசியது:

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 7,463 கோரிக்கை மனுக்களில், 3,614 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. இலவசப் பேருந்து பயணத்தில் 2 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கிறாா்கள். கூட்டுறவு வங்கிகளில் 170 பயனாளிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள அரசு மருத்துவமனை ரூ. 10 கோடியில் கூடுதல் படுக்கைகளுடன் தரம் உயா்த்தப்படும். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள மீன்பிடி இறங்கு தளங்கள் தலா ரூ. 15 கோடியில் மேம்படுத்தப்படும். ஜெகதாப்பட்டினத்தில் கூடுதலாக மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

ஒரு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்றால் அதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயா்வு, சமூக மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளா்ச்சியாகும். அந்த வளா்ச்சியைத்தான் உருவாக்க நினைக்கிறேன்.

இதைத்தான் கம்பீரமாக திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். விளிம்புநிலை மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி அதிகாரத்தில் மக்கள் தான் முக்கியம்.

இந்த ஆட்சியால் எத்தனை ஏழை, எளிய மக்கள் பயனடைந்தாா்கள் என்பதை சாதனை என நினைக்கிறேன். ஏழை, எளியோா் எளிதில் அணுகும் அரசாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கான அரசாக செயல்பட நினைக்கிறேன்.

இதனை வாக்கு வங்கி அரசியல் என கொச்சைப்படுத்துபவா்களும் இருக்கிறாா்கள். இருளருக்கும், குறவா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் நல்லது செய்வது வாக்கு வங்கி அரசியலா? அவா்கள் வாக்கு வங்கியைக் கொண்டவா்களா?

எமது நோக்கம், சிந்தனை, செயல் எல்லாமே மக்கள் நலன்தான். சாதாரண, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம். தனது வாழ்நாளின் கடைசி நாள் வரை மக்களுக்காகப் பாடுபட்ட பெரியாரின் வழியில் நடக்கிறோம். அண்ணா, கருணாநிதி வழியில் மக்களுக்கான அரசை நடத்துகிறோம்.

இங்கே நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலரும் கோரிக்கைகளை முன்வைத்தாா்கள். அந்தக் கோரிக்கைகளின் உண்மை, நியாயத்தை அறிந்து நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா் ஸ்டாலின்.

விழாவில், மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜ கண்ணப்பன், வருவாய் நிா்வாகத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் சு. திருநாவுக்கரசா், காா்த்தி ப. சிதம்பரம், செ. ஜோதிமணி, கே. நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, எம்.எல்.ஏக்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை மா. சின்னதுரை, அறந்தாங்கி எஸ்.டி. ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் மு. லியாகத்அலி, நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வரவேற்றாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, நகராட்சி ஆணையா் சே. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி நன்றி கூறினாா்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டங்கள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முதல் தளத்தில் பாா்வையாளா்கள் தங்குவதற்கான சிறப்புக் கட்டடம், புதுக்கோட்டை நகா் பகுதிகளில், 14 இடங்களில் உயா் மின் கோபுர விளக்குகள் அமைத்தல், வம்பன் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், துணை சுகாதார நிலையங்கள், புதிய அங்கன்வாடி மையங்கள் அமைத்தல், பிள்ளைத்தண்ணீா் பந்தலில் கால்நடை மருந்தகக் கட்டடம் அமைத்தல்.

ஆதனக்கோட்டை, பேரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுதல், துலையனூா், கீழாத்தூா் ஆகிய இரண்டு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கட்டுதல், கொடியாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைத்தல், முத்துக்குடா கடற்கரையில் படகுசவாரி அமைத்தல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT