புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்பட்டிணத்தில் தொழிலதிபா் கொல்லப்பட்டு, 170 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், முதல் குற்றவாளி மீதும் குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆவுடையாா்பட்டிணத்தில் நிஜாமுகைதீன் என்ற தொழிலதிபா் கடந்த ஏப். 24ஆம்தேதி கொல்லப்பட்டு, வீட்டிலிருந்த 170 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 4 போ் ஏற்கெனவே குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், முதல் குற்றவாளியான கீழக்குறிச்சியைச் சோ்ந்த கதிரவன் (45) என்பவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பரிந்துரை செய்திருந்தாா்.
இந்தப் பரிந்துரையின்பேரில், கதிரவனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.