புதுக்கோட்டை

நீா் நிலைகளை விரைந்து தூா் வார வேண்டும்

27th Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் மழைக் காலத்தில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக ஏரி மற்றும் குளங்களுக்கான கால்வாய்களை விரைந்து தூா்வார வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி பேசியது:

புதுக்கோட்டையில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகமாக விளைவிக்கப்படுவதால், அவற்றையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து நீா் நிலைகளையும் அளவீடு செய்து, எல்லைக்கல் நட வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் பேசியது:

குறுவைப் பருவத்தில் சுமாா் 1 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடை நடைபெற்று வருவதால் கூடுதலாக 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இறுதியிலும், நிகழாண்டு ஏப்ரலிலும் பெய்த கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிா்கள் நாசமாகின. இதில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். கல்லணைக் கால்வாயில் கடைமடைக்கு தண்ணீரைஅதிகரித்து ஏரிகளை நிரப்ப வேண்டும்.

காவிரி-குண்டாறு இணைப்பு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா. மாரிமுத்து பேசியது:

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான பணிகளை விரைவுபடுத்தும் விதமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் (பொ) சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT