புதுக்கோட்டை

வெள்ளாள விடுதியில் நெல் கொள்முதல் பணிகள் தொடக்கம்

6th Jul 2022 01:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வெள்ளாளவிடுதி ஊராட்சியைச் சுற்றியுள்ள மங்களாகோவில், அண்டனூா், நெப்புகை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருளான நெல்லை விற்பனை செய்ய வெள்ளாளவிடுதி அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தில் உள்ள மைதானத்தில் கிடத்தி வைத்திருந்தனா். கடந்த சில நாட்களாக திறந்தவெளியில் நெல்மூட்டைகள் இருந்துவந்த நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனா். இந்நிலையில், வெள்ளாளவிடுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து விவசாயிகளிடம் விசாரித்தபோது, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யும் நெல்லுக்கு உரிய பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு செய்யப்படும். சாக்குடன் 41 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ரூ. 824-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT