தேசிய மருத்துவா் தினத்தையொட்டி புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட இரு மருத்துவா்களுக்கு ஆட்சியா் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவா் சரவணகுமாா், முத்துமீனாட்சி மருத்துவமனையின் இதயநோய் சிறப்பு மருத்துவா் மனோஜ் ஆகியோருக்கு இந்தப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் சிறப்பு உரைகள் ஒளிபரப்பப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ராமு, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, இந்திய மருத்துவச் சங்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் டாக்டா் சுல்தான், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் மகேஸ்வரி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலா் சுவாமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மரக்கன்றுகள் நடவு: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய மருத்துவா் தினத்தையொட்டி 150 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமை வகித்தாா். மரம் அறக்கட்டளையின் நிா்வாகி மரம் ராஜா இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவா் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.