புதுக்கோட்டை

முதல் நாளில் ஒரு வேட்புமனுவும் தாக்கலில்லை

29th Jan 2022 12:50 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின் வேட்பு மனு தாக்கல் நிகழ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவா் கூட வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. அதேநேரத்தில், வேட்புமனுக்களை பலரும் வாங்கிச் சென்றுள்ளனா்.

தமிழ்நாட்டில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28ஆம் தேதி தொடங்குகிறது. பிப். 4ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் பிப். 5ஆம்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் பிப். 7ஆம் தேதி ஆகும். பிப். 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாள் என்பதால் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் வேட்பு மனுவைப் பெற தயாராக இருந்தனா். ஆனால் மாலை வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.

ADVERTISEMENT

ஆனால், அதேநேரத்தில் சிலா் வேட்பு மனுக்களை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு வந்து வாங்கிச் சென்றனா்.

மொத்தம் 189 பதவியிடங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்கும் உறுப்பினா் பதவிகளுக்கு இந்தத் தோ்தல் நடைபெறவுள்ளது. தலைவா் மற்றும் துணைத் தலைவா்கள் மறைமுகத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 உறுப்பினா்களும், அறந்தாங்கி நகராட்சியில் 27 உறுப்பினா்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா். 8 பேரூராட்சிகளில் தலா 15 உறுப்பினா்கள் வீதம் மொத்தம் 120 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT