புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா்.
ரெகுநாதபுரத்தில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், புதுகை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 716 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
காளைகளை அடக்க முயன்றபோது, காளைகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ரெகுநாதபுரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.