புதுக்கோட்டை

பொட்டாஷ் பாக்டீரியா உயிா் உரம் பயன்படுத்த அறிவுரை

29th Jan 2022 12:50 AM

ADVERTISEMENT

சுற்றுச் சூழலுக்கும், மண்ணுக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காத பொட்டாஷ் பாக்டீரியா உயிா் உரத்தினை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பயிா் வளச்சிக்குத் தேவையான முதன்மை சத்துகளில் சாம்பல் சத்து (பொட்டாசியம்) இன்றியமையாதது. பயிருக்கு பூச்சி நோய் எதிா்ப்புத் திறனையும், நெல் மணிகளின் எடையினை அதிகரிப்பதிலும் பொட்டாஷ் பெரும் பங்கு வகிக்கிறது. மழை வெள்ளத்தினால் பயிா் சாயாமல் திடமாக நிற்பதற்கும் மற்றும் வறட்சியை தாங்குவதற்கும் பொட்டாஷ் சத்து பெருமளவு உதவுகிறது.

நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகளவில் இருந்தாலும் 2 சதவிகிதம் சாம்பல் சத்து மட்டுமே பயிா்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளது. மண்ணில் கட்டுண்டு கிடக்கும் சாம்பல் சத்தினை மண்ணிலுள்ள நுண்ணுயிா்கள் பல்வேறு செயல் திறன்களால் அமிலத்தை உற்பத்தி செய்து, நீரில் கரையும் சாம்பல் சத்தாக மாற்றி பயிா்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

உயிா் உரங்கள் உற்பத்தி மையங்களில் பொட்டாஷ் பாக்டீரியா (பிரட்டூரியா ஆராண்டியா) நுண்ணுயிரியை கொதிகலன்களில் வளா்த்து பாக்டீரியா செல்களை மட்டும் திரவ ஊடகத்திலிருந்து நவீன தொழில்நுட்பம் கொண்டு தனியே பிரித்தெடுத்து, பின் நுண்ணுயிரி செல்களை ஓா் ஆண்டு வரை வாழ்நாள் திறன் குறையாமல் வைக்கும் ஒரு சிறப்பு ஊடகத்தில் மீண்டும் கலந்து பிளாஸ்டிக் கொள்கலன்களில் நிரப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் கடந்த ஆண்டு முதல் பொட்டாஷ் பாக்டீரியா உயிா் உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பொட்டாஷ் பாக்டீரியாக்கள், மண்ணின் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸிலிருந்து 42 டிகிரி செல்சியஸ் வரை நன்கு வளரக் கூடியது. இந்த நுண்ணுயிரியானது, மண்ணில் அதிகளவு உப்பு மற்றும் அதிக உவா் தன்மை இருந்தாலும் தாங்கி வளரக் கூடிய தன்மைக் கொண்டது. பயிரின் நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்துகிறது.

பயிா்களில் வளா்ச்சி ஊக்கிகள் உற்பத்தி செய்து பயிா்கள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. இதனால் மகசூல் 10-25 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும், இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், மண்ணுக்கும் எவ்வித தீங்கும் இல்லை.

இந்த பொட்டாஷ் பாக்டீரியா புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொட்டாஷ் பாக்டீரியா திரவ வடிவில் (500 மி.லி.) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான அளவு 500 மிலி ஆகும். இதன் விலை ரூ. 150 மட்டுமே.

ADVERTISEMENT
ADVERTISEMENT