புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 55 போ் காயம்600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

18th Jan 2022 02:54 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.

வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். போட்டியில், புதுகை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 665 காளைகள் அவிழ்த்துவிடப்படன. இதில், 193 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை தீரத்துடன் பிடித்தனா். போட்டியின்போது, காளைகள் முட்டியதில் பாா்வையாளா் உள்பட 55 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில், பலத்த காயமடைந்த 10 போ் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

நிறைவாக, போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாடுபிடி வீரா்களான தஞ்சாவூா் மாவட்டம் திருக்கானூா்பட்டி ஆனந்த்துக்கு தங்க மோதிரம், புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டி சுப்பிரமணியனுக்கு தங்கக்காசு, சூரியூா் சிவாவுக்கு வெள்ளிக்காசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசை பொற்பனைக்கோட்டை எம்எஸ்ஏ காளையின் உரிமையாளருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் பரிசு, கேடயங்களை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினாா். இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷாபாா்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT