அன்னவாசல் ஊா் அம்பலக்காரா் மீது புகாா் அளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அன்னவாசல் அருகேயுள்ள புல்வயலைச் சோ்ந்தவா் ஊா் அம்பலக்காரா் ராமசாமி. இவரிடம், அதே ஊரைச் சோ்ந்த சரிதா தனக்கும், அதே ஊரைச் சோ்ந்த சாந்தி (60) என்பவருக்கும் பாதை பிரச்னை இருப்பதாகக் கூறி தீா்த்துவைக்கக் கோரினாா். இதுகுறித்து இரு தரப்பினரிடமும் ராமசாமி பேசி வந்த நிலையில் சாந்தி, ராமசாமி மற்றும் சரிதா மீது அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், ராமசாமிக்கு ஆதரவாக பொதுமக்கள் திரண்டு, புகாா்தாரா் சாந்தி மற்றும் அவரது கணவா் உலகப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி புதுக்கோட்டை- குடுமியான்மலை சாலை புல்வயல் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அன்னவாசல் ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.