புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி, அம்மன் கோயில் வீதியில் ரூ. 65 லட்சம் மதிப்பில் சிமென்ட் கல் தளம் (பேவா் பிளாக்) சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.
தொடா்ந்து பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில், புதிதாக கடன் கோரி விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகள் 7 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரமும், முதல் கடன் தொகை கட்டி முடித்து இரண்டாம் நிலையாக விண்ணப்பித்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ. 40 ஆயிரமும் என மொத்தம் ரூ.1.10 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவியை அமைச்சா் வழங்கினாா்.
பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.
ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, செயல் அலுவலா் மு.செ. கணேசன், வீடு கட்டும் கூட்டுறவுச் சங்க இயக்குநா் அழகப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.