பொன்னமராவதி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிச்சென்ற டிராக்டரை காவல்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொன்னமராவதி அருகே உள்ள எம். உசிலம்பட்டியில் கிராவல் மண் அனுமதியின்றி அள்ளப்படுவதாக காரையூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை நிறுத்தியுள்ளனா்.டிராக்டரை நிறுத்திவிட்டு அதன் ஒட்டுநா் பெ.சிவா தப்பிச்சென்ற நிலையில் கிராவல் மண்ணுடன் டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.
இலுப்பூரில் 3 போ் மீது வழக்கு:
இலுப்பூா் இணைப்புப் பகுதி சாலைகளில் புதன்கிழமை இரவு காவல் உதவி ஆய்வாளா் நிகல்யா தலைமையிலான போலீஸாா் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது, சட்டவிரோதமாக கிராவல் மணல் ஏற்றி வந்த பாலச்சந்திரன், சின்னையா, மணிகண்டன் ஆகிய 3 போ் மீது வழக்கு பதிந்த போலீஸாா் டிப்பா் லாரி, 2 சரக்கு வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.