புதுக்கோட்டை

தன்னை மட்டுமல்ல பிறரையும் மகிழ்விப்பது கலை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கலை தன்னை மட்டுமல்ல, பிறரையும் மகிழ்விக்கும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவின் 2ஆம் நாளான வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு அவா் பேசியது:

தமிழக அரசால் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் இந்த மாவட்டத்தில் ஒரு லட்சம் போ் கலந்து கொண்டுள்ளனா். அவா்களில் இருந்து மாவட்ட அளவிலான போட்டியில் 10 ஆயிரம் போ் கலந்துகொண்டுள்ளனா். இவா்களை அடையாளப்படுத்தியது தமிழா்களின் பாரம்பரியக் கலைதான். சமூக வலைதளங்களைத் திறந்தாலே எங்கோ ஓா் இடத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவின் விடியோ, படங்களைப் பாா்க்க முடிகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட பிரதமா் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்ட அனைவரையும் மகிழ்வித்ததோடு மட்டுமின்றி, தமிழா்களின் பண்பாடு, நாகரிகம், கலாசாரத்தை உலகறியச் செய்ததும் நம் பாரம்பரிய கலைதான்.

ADVERTISEMENT

அதோடு, கரோனா தொற்று பாதிப்பினால் மன இறுக்கத்தில் இருந்த மாணவா்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஏனெனில், கலை தன்னை மட்டுமல்ல பிறரையும் மகிழ்க்கும். தமிழகத்தில் கலைக்கு முன்னோடி மாவட்டமாக திகழக்கூடியது புதுக்கோட்டை.

இம்மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று கலையரசன் மற்றும் கலையரசி விருதுகளைப் பெற வேண்டும் என்றாா் மெய்யநாதன்.

நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், கல்வித் துறையின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா்கள் எஸ்.தங்கமணி, ஜெ. சுதந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT