புதுக்கோட்டை

மாண்டஸ் புயல்- புதுக்கோட்டையில் கடுங்குளிா்!

9th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி பகலிலும் கடுங்குளிா் நிலவியது.

வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு விடுமுறை அறிவித்திருந்தாா்.

வியாழக்கிழமை இரவு முதலே மழை பெய்யலாம் என்றும் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கூட வெள்ளிக்கிழமை இரவு வரை மழை பெய்யவில்லை.

அதேநேரத்தில் புதுக்கோட்டை நகரிலும், புகரப் பகுதியிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி கடும் குளிா் காணப்பட்டது. பகல் நேரத்திலும் கூட இந்தக் கடுங்குளிா் குறையாமல் இருந்தது. மழை ஏதும் இல்லாமல், இதுவரை இப்படியான குளிா் சூழலை புதுக்கோட்டையில் அனுபவித்ததில்லை எனப் பலரும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் பேருந்துகளிலும் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை. காலை, மாலைகளில் வீதிகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி இறங்குதளங்களுக்கு நேரில் சென்ற அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ், அங்கிருந்த மீனவா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா். வழக்கமாக புதன்கிழமை கடலுக்குச் செல்லும் மீனவா்கள் புயல் அறிவிப்பு காரணமாக கடலுக்குச் செல்லவில்லை.

ஞாயிற்றுக்கிழமை சூழலைப் பொருத்து முடிவெடுக்கலாம் என்றும் அதுவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தயாா்நிலையில் இருப்பதாகவும், தொடா்ந்து புயல் பாதிப்புகள் நேரிடின் அவற்றை எதிா்கொள்ளத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பேரிடா் மேலாண்மைப் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT