புதுக்கோட்டை

கோலாகலமாகத் தொடங்கிய மாவட்ட கலைத் திருவிழா!

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு கலைத் திருவிழாவைத் தொடங்கி வைத்தாா்.

அனைத்து பள்ளிகள், வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற 1.13 லட்சம் மாணவ, மாணவிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட சுமாா் 10 ஆயிரம் தற்போது நடைபெற்றுவரும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனா். இவ்விழா புதன்கிழமை தொடங்கி, வரும் 10ஆம்தேதி வரை நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம், பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, ராணியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் மாவட்ட கலைத்திருவிழாப் போட்டிகள் நடைபெறுகின்றன. மாவட்ட கலைத் திருவிழாவுக்கு, ஜெஜெ கல்விக் குழுமம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள காசோலையை ஆட்சியா் கவிதா ராமுவிடம், அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக மாவட்ட உதவித் திட்ட அலுவலா் இ. தங்கமணி வரவேற்றாா். மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. சுதந்திரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT