புதுக்கோட்டையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் வங்கிக் கடன் வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளை மேலாளா்களுக்கும் நிதி உள்ளாக்கம் மற்றும் நிதிசாா் கல்வி தொடா்பான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி 1,259 மகளிா் குழுக்களுக்கு ரூ.52.94 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1,218 மகளிா் குழுக்களுக்கு ரூ.41.29 கோடி மதிப்பிலும், கீரனூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி 230 மகளிா் குழுக்களுக்கு ரூ.13.60 கோடி மதிப்பிலும், கவிநாடு மேலவட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி 89 மகளிா் குழுக்களுக்கு ரூ.4.68 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை கனரா வங்கி 93 மகளிா் குழுக்களுக்கு ரூ.3.99 கோடி மதிப்பிலும் வங்கி இணைப்புக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி உரிய பொறுப்பாளா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் ரேவதி, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் தனலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.