புதுக்கோட்டை

சத்தியமங்கலம் சாலையை சீரமைத்துத் தரக் கோரிக்கை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் உள்ள சத்தியமங்கலம் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா்.

புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் விலக்கு பகுதியில் இருந்து மெய்வழிச்சாலை செல்லும் சாலை உள்ளது. சத்தியமங்கலம், சனையப்பட்டி, உடையாண்டிப்பட்டி, சேந்தாப்பட்டி வழியாக 7 கிமீ தொலைவில் மெய்வழிச்சாலைக்கு சென்றடைகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை என்பதால் ஏற்கெனவே பழுதடைந்திருந்த நிலையில், அண்மையில் பெய்து வரும் மழை மேலும் சாலையை சேதமாக்கியிருக்கிறது.

இத்தனைக்கும் இந்தச் சாலையின் வழியேதான் தினசரி 12 முறை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மெய்வழிச்சாலைக்கு சென்று வருகின்றன. சத்தியமங்கலம், சனையப்பட்டி, உடையாண்டிப்பட்டி, சேந்தாப்பட்டி, மெய்வழிச்சாலை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இப்பேருந்துகளைத்தான் புதுக்கோட்டை நகருக்கு வந்து செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அருகேயுள்ள குக்கிராம மாணவா்கள் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகின்றனா் என்கிறாா் அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சண்முகம்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கு முன்பாக நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில், விரைவில் சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேலும் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் வரும் டிச. 13ஆம் தேதி இதே சாலையில் பொங்கல் வைக்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருப்பதாகக் கூறுகிறாா் அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி. ராமன்.

எனவே, சத்தியமங்கலம் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT