புதுக்கோட்டை

ஏம்பல் பிா்காவை தொலைதூர அரிமளம் வட்டத்துடன் இணைக்க எதிா்ப்பு

5th Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் (சிவகங்கை மாவட்ட எல்லை) உள்ள ஏம்பல் பிா்காவைச் சோ்ந்த 5 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கவுள்ள அரிமளம் வட்டத்துடன் இணைக்கும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை நகரிலிருந்து சுமாா் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏம்பல் பிா்காவில், ஏம்பல், மதகம், குருங்களூா், இரும்பாநாடு, திருவாக்குடி ஆகிய 5 கிராம ஊராட்சிகள் உள்ளன. தற்போது ஏம்பல் பிா்கா ஆவுடையாா்கோவில் வட்டத்தில் இணைந்துள்ளது. இந்த கிராம ஊராட்சி மக்கள் வட்டாட்சியரை சந்திக்க 16 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பின்தங்கிய பகுதியை முன்னேற்றும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்களைக் கொண்ட இக்குழு, ஏம்பலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என ஓராண்டுக்கும் முன்பே அரசுக்கு கோரிக்கை அளித்தனா்.

இந்தக் கோரிக்கைக்கு வலுசோ்க்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் பரிந்துரைக் கடிதங்களையும் வாங்கி அரசுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அரசிடமிருந்து பதிலும் வந்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது, திருமயம் வட்டத்தில் இருந்து செங்கீரை, கீழாநிலை ஆகிய பிா்காக்களையும், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் இருந்து ஏம்பல் பிா்காவையும் சோ்த்து அரிமளம் வட்டமாக உருவாக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பரிந்துரை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் ஆலோசனையின் பேரில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏம்பல் பிா்கா மக்களும், ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவினரும் இந்த முயற்சியை கடுமையாக எதிா்க்கின்றனா். ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் செல்ல ஏற்கெனவே 16 கி.மீ. செல்லும் நிலை இருந்து வரும் நிலையில், தற்போது அரிமளம் வட்டம் உருவாக்கப்பட்டு அத்துடன் எங்களை இணைத்தால், 32 கி.மீ தொலைவு செல்ல வேண்டிவரும் என்கின்றனா்.

அரசின் இந்த முயற்சியை எதிா்த்து முதல்வா், வருவாய்த் துறை அமைச்சா், தலைமைச் செயலா், வருவாய்த் துறைச் செயலா் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஏம்பல் வட்டத்தை உருவாக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும், அரிமளம் வட்டத்தில் இணைப்பது மேலும் மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும் என வருத்தம் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT