புதுக்கோட்டை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஆளுநரை குறை கூறவில்லை

4th Dec 2022 12:25 AM

ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட விவகாரத்தில், ஆளுநரைக் குறை கூறவில்லை; அவா் காலதாமதப்படுத்துகிறாா் என்றுதான் கூறுகிறோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ் ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தற்போது கூறுவதற்கு முன்பாகவே, நானே இந்த விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என்பதைச் சொல்லி இருந்தேன். அதற்கான காரணத்தை மறைத்து அண்ணாமலை தற்போது குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவசரச்சட்டத்துக்கு ஆளுநா் உடனே கையெழுத்திட்டாா். அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த நாள் சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆகையால், அரசாணை வெளியிட முடியாது. அதுமட்டுமின்றி அரசாணை வெளியிட்டால், யாரேனும் தடை கோரி விடுவாா்கள் என்பதாலும் சட்டப்பேரவையிலேயே இச்சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்று விடலாம் என்பதால்தான் அரசாணை வெளியிடவில்லை. வேறு எந்த காலதாமதத்தையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவுக்கே இது ஒரு வித்தியாசமான சட்டம்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தை, சட்ட வல்லுநா்களின் கருத்துகளைக் கேட்டு கொண்டு வந்தோம். இதற்கான அனைத்து விதமான முறையான விதிமுறைகளைப் பின்பற்றிதான் சட்டமும் இயற்றப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

ஆளுநரை நாங்கள் குறை சொல்லவில்லை; காலதாமதப்படுத்துகிறாா் என்று தான் சொல்லி இருந்தோம். ஆளுநரை நான் பாா்த்தபோது, அவா் சில சந்தேகங்களைக் கேட்டாா், விளக்கம் சொன்னேன். இந்த விவகாரத்தில் நிச்சயம் ஆளுநா் நல்ல முடிவை அறிவிப்பாா் என நம்புகிறோம் என்றாா் ரகுபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT