புதுக்கோட்டை

தந்தை உயிரிழந்ததை அறியாத தமிழக வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம்

2nd Dec 2022 12:49 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை அருகே தந்தை திடீா் மாரடைப்பால் உயிரிழந்ததை அறியாத தமிழக வீராங்கனை லோக பிரியா, நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கந்தா்வக்கோட்டை அருகேயுள்ள கல்லூகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வமுத்து(50) - ரீட்டா (46) தம்பதியின் மூத்த மகள் லோக பிரியா ( 22) மாவட்ட, மாநில அளவிலான பளு தூக்குதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றவா். இவா், நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்க நியூசிலாந்து சென்றிருந்தாா்.

இந்நிலையில், அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் ஜூனியா் பெண்கள் (52 கிலோ) பிரிவில் பங்கேற்று 350 கிலோ வரை பளு தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். இதைத்தொடா்ந்து, பெற்றோரிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க முயன்றபோது, அவருக்கு பேரதிா்ச்சி காத்திருந்தது.

முன்னதாக, திருவாரூா் மாவட்டம், திருமாகோட்டையில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற அவரது தந்தை செல்வமுத்து புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்ததும், கல்லூக்காரன்பட்டியில் அவருக்கு இரவே இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது. தனது தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு கதறி அழுத அவா், போட்டியில் தங்கப் பதக்கம் வென்றும் தனது தந்தையின் முகத்தை கடைசி வரையில் பாா்க்க இயலாமல் தாளாத துக்கமடைந்தது காண்போரைக் கண்கசியச் செய்தது. செல்வமுத்து - ரீட்டா தம்பதிக்கு பளு தூக்கும் வீராங்கனை லோக பிரியா உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT