புதுக்கோட்டை

புதுகையில் மூளை சாவடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

2nd Dec 2022 12:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கட்டடத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாகப் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள இடையாத்திமங்கலத்தைச் சோ்ந்தவா் குஞ்சுநாதன் (53). கட்டடப் பணியில் இருந்தபோது கடந்த திங்கள்கிழமை (நவ. 28) தவறிவிழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவா் புதன்கிழமை (நவ. 30) மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரது விருப்பத்தின்பேரில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் ஆலோசனை பெறப்பட்டு, வியாழக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது. குஞ்சுநாதனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்களின் கருவிழிகள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.

ஏற்கெனவே உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்திருந்தவா்களில் மூப்பு அடிப்படையில் கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள், கருவிழிகள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

அறுவைசிகிச்சையை மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமையில், இந்திராணி, சரவணகுமாா், ஹேமா அகிலாண்டேஸ்வரி ஆகியோா் கொண்ட மருத்துவக்குழுவினா் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT