புதுக்கோட்டை

மரங்களின் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரிக்கை

10th Aug 2022 01:04 AM

ADVERTISEMENT

சவுக்கு உள்ளிட்ட மரங்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கொடுத்து அரசு வாங்கக் கூடாதா? என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நமது காப்புக் காடுகளுக்குள், பல வகையான மரங்களும், வனப் புதா்களுமாக இருந்த காலத்தில், பல வகை பேருயிா், சிற்றுயிா்கள் வாழ்ந்து வந்தன. இந்தக் காட்டில் பெய்த மழைதான் பாசனக் குளங்களுக்கு தண்ணீா் தரும் வரமாக இருந்தது.

வனத் தோட்டக் கழகம் காட்டை அழித்து தைல தோட்டமாக்கி 5 ஏக்கருக்கு ஒரு அகழி அமைத்து அதன் கீழ் உள்ள குளத்திற்கு மழைநீா் செல்லாமல் தடுத்துவிட்டாா்கள். காட்டின் அளவு 33 சதவிகிதத்துக்கு பதில் 17 சதவிகிதம் உள்ள நமது தமிழகமும் அதன் சமவெளி வனப்பகுதியும் அழியலாமா?

ADVERTISEMENT

12 ஆண்டுகளில் காகித விலை மும்மடங்கு ஏற்றப்பட்டு விட்டது, ஆனால் மரங்களின் கொள்முதல் விலை குறைந்துள்ளதே தவிர கூட்டப்படவில்லை. 12 ஆண்டுகளாக சவுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5500-க்கு காகித ஆலைவாசலில் கொண்டு போய் கொடுக்க வேண்டி உள்ளது. டன்னுக்கு ரூ. 2,700 செலவாகிறது. மீதி ரூ. 2,800 கூட காகித ஆலையிலிருந்து உடனடியாகக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அரசு வனத் தோட்டங்களிலிருந்து தைல மரம் மிகவும் குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கிறது. இதில் பலருக்கும் லாபம் உள்ளது.

முள்ளில்லா மூங்கில், சவுக்கு, சூபாபுல் போன்ற இன்னும் பிற மரங்களை விவசாயிகளைச் சாகுபடி செய்ய வைத்து அவா்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கொடுத்து அரசு வாங்கக் கூடாதா? அல்லது உலகச் சந்தையில் காகிதக்கூழ் மரம் மிகவும் மலிவாக உள்ளது என 4 ஆண்டுக்கு முன் கஜா புயல் சமயத்தில் காகித ஆலைகள் சொல்லியதே, அதுபோல் வாங்கக்கூடாதா? என அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT