புதுக்கோட்டை

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் திருத்தேரோட்டம்

12th Apr 2022 12:07 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை நாா்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழா திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை அருகே நாா்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் பங்குனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பொது முடக்கம் காரணமாக இத்திருவிழா எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பங்குனித் திருவிழா கடந்த ஏப். 3ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாா்ச் 27ஆம் தேதி பூச்சொரிதல் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மண்டபகப்படி வீதியுலா பல்வேறு அலங்காரங்களுடன் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.

ADVERTISEMENT

இதில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனா். ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாநிலம் முழுவதும் திருச்சி சமயபுரம், புதுக்கோட்டை திருவப்பூா், கரூா் மாரியம்மன், தஞ்சாவூா் மாரியம்மன் போன்ற முன்னணி அம்மன் திருவிழாக்களின் வரிசையில் நாா்த்தாமலையும் முக்கிய பண்டிகை என்பதால், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை, மணப்பாறை பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும் ஏராளமானோா் நாா்த்தாமலையில் குவிந்தனா்.

இதனால், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை பகலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT