அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 3 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா் ஆ. மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:
தமிழா் நாகரீகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் தொல்லியல் தலங்களின் சிறப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு தொல்லியல் துறை வாயிலாக ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பயிற்சி அளிப்பதற்கான முன்மொழிவு பள்ளிக் கல்வித் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதற்காக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொல்லியல் துறை தங்கம் தென்னரசு ஆகியோருக்கும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.