புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மசூதியை அகற்றக்கோரி, பாஜக நிா்வாகி எச்.ராஜா தலைமையில் பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்த முகமது அலி, வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது, அந்தக் கட்டடத்தில் மசூதி போன்ற தோற்றத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த பாஜகவினா் போராட்டம் நடத்தினா். இதைத்தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நடத்திய சமாதானக் கூட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திற்குள், கட்டடத்தில் உள்ள மசூதி போன்ற அமைப்புகளை அகற்றுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அகற்றப்படவில்லை.
இந்நிலையில், மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை திரண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா தலைமையிலான பாஜகவினா், கட்டடத்தை உடனே அகற்ற வலியுறுத்தி, அங்கிருந்து ஊா்வலமாக கட்டடத்தை நோக்கிச் சென்றனா். அவா்களை, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், எச்.ராஜா போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஏப்.12-ஆம் தேதிக்குள் மசூதி போன்ற கட்டுமானத்தை உரிமையாளரே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், ஊராட்சி நிா்வாகம் மூலம் அகற்றப்படும் என மேற்பனைக்காடு ஊராட்சித் தலைவா் மஞ்சுளா எழுத்துப்பூா்வ உத்தரவாதம் அளித்தாா். இதைத்தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.
இதுகுறித்து எச்.ராஜா கூறியது: இவ்விஷயத்தில் அமைச்சா் அகற்றக்கூடாது என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாா். தற்போது ஊராட்சித் தலைவா் ஒரு வாரத்தில் அகற்றுவதாக எழுதிக்கொடுத்துள்ளாா் என்றாா்.