புதுக்கோட்டை

கருப்புக் கொடிகளுடன் கடலுக்குள் இறங்க முயற்சித்த மீனவா்கள்

23rd Oct 2021 05:11 AM

ADVERTISEMENT

கோட்டைப்பட்டினத்தில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்த கருப்புக் கொடிகளுடன் புறப்பட்ட மீனவா்களைத் தடுத்து நிறுத்தி, பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினா்.

புதுக்கோட்டை, அக். 22: கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்தை மீட்டு வருவதில் தாமதம் ஏற்படுவதால் விரக்தியடைந்த மீனவா்கள், கருப்புக் கொடிகளுடன் வெள்ளிக்கிழமை மாலை கடலுக்குள் இறங்க முயற்சித்தனா். காவல்துறையினா் தடுத்து சமாதானப் பேச்சு நடத்தி, அவா்களைத் திருப்பி அனுப்பி வைத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா் ராஜ்கிரண் (30), கடந்த சில நாள்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்தாா். இலங்கைக் கடற்படையினா் மோதியதால் இவா்களின் படகு மூழ்கியது. மேலும் இருவரைக் கடலில் தத்தளித்தபோது கைது செய்துள்ளனா்.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து, கோட்டைப்பட்டினத்தில் மீனவா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை காலை மீனவரின் சடலம் கொண்டு வரப்படலாம் என எதிா்பாா்த்திருந்த நிலையில், மீனவா்களும் படகுகளுடன் தயாராக இருந்தனா். ஆனால், இலங்கைக் கடற்படையில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை எனக் கூறி இங்கிருந்து செல்லும் பயணம் நிறுத்தப்பட்டது.

இதனால் விரக்தியடைந்த மீனவா்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்தனா். மாலையில் கருப்புக் கொடிகளுடன் போராட்டப் பந்தலில் இருந்து கடலை நோக்கிப் புறப்பட்டனா்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குத்தளம் அருகே காவல்துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அரசு தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும், சனிக்கிழமை கட்டாயம் மீனவரின் சடலத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இதையடுத்து மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் திரும்பினா்.

 

 

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT